இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை நடத்துங்கள் - கெவின் பீட்டர்சன்
ஏற்கனவே கடந்த ஒரு வருட இயல்பு வாழ்க்கையை முற்றிலும் புரட்டி போட்ட கரோனா வைரஸின், இரண்டாம் அலை தற்போது உலகம் முழுவதும் தீயாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் கரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
கரோனாவின் கோர தாண்டவத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறி வரும் நிலையில், தற்போது அதை விட மிகப்பெரும் பிரச்சனையாக ஆக்ஷிஜன் பற்றாக்குறையும் நாடு முழுவதும் ஒலித்து வருகிறது. கரோனாவை விட ஆக்ஷிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து விடுமோ என்று அச்சப்படும் அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியாவுமே மிகப் பெரும் குழப்பத்தில் இருப்பதை அனைவரும் கண் கூடாக பார்த்து வருகிறோம்.
இருப்பினும் கரோனாவுக்கு மத்தியில் பாதுகாப்பாக நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், வைரஸ் தொற்று வீரர்களை தாக்கியதை தொடர்ந்து பாதியிலேயே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இன்னும் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளதால், எஞ்சியுள்ள போட்டிகள் நடைபெறுமா இல்லை முழுமையாக ரத்து செய்யப்படுமா என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தி முடிக்காவிட்டால் பிசிசிஐ.,க்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்பதால் எஞ்சியுள்ள போட்டிகளை எப்படியாவது நடத்தியே தீர வேண்டும் என பிசிசிஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, அதற்கான வேலையை தற்போதே துவங்கிவிட்டனர்.
இதற்காக இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் வைத்து நடத்தலாம் என முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கெவின் பீட்டர்சன்,“வரும் செப்டம்பர் மாதம் துபாயில் வைத்து ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என பலர் பேசி வருவதை பார்த்து வருகிறேன். ஆனால் என்னை பொறுத்தவரையில் துபாய்க்கு பதிலாக இங்கிலாந்தில் வைத்து தான் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வேண்டும். இங்கிலாந்து – இந்தியா இடையேயான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதும் இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும், இங்கிலாந்து தொடர் முடிந்த அடுத்த சில தினங்களில் ஐபிஎல் தொடரை துவங்கினால் சிறப்பாக இருக்கும். அப்படி நடந்தால் இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.