விராட் கோலி எப்போதும் சிறந்த வீரர்களில் ஒருவர் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சமீபக் காலத்தில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக வலது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இருக்கிறார். தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் தரமான ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக் கூடியவராக இருக்கும் ஒரே ஒரு வீரர் இவர்தான்.
இவரின் வருகை ஆஸ்திரேலியா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பினிஷராக இடம் பெறும் மிதவேக பந்துவீச்சாள ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்க்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கதவுகளை சாத்தியிருக்கிறது. தற்பொழுது மிக முக்கியமான பார்டர் கவாஸ்கர் டிராபியை விளையாட இந்தியாவுக்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணியில் இவருக்கான இடம் இல்லாமல் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து பேசி உள்ள அவர், “விராட் கோலி எப்போதும் சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் வயது மற்றும் அவர் இருக்கும் நிலையைக் கொண்டு இந்தத் தொடரை அவர் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பார். சிறந்த வீரர்கள் எப்பொழுதும் சிறந்த தொடர்களையே தேர்வு செய்வார்கள். இதை நாம் விராட் கோலியிடம் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் பார்த்தோம். அவர் எவ்வளவு பசியாக இருக்கிறார் என்பதற்கு அது ஒரு அறிகுறி.
காயங்கள் எப்போதும் நல்லது கிடையாது. எதிரணியில் இருந்தாலுமே சிறந்த வீரர்களுடன் விளையாடத்தான் விரும்புவீர்கள். ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆட்டத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நாங்கள் அறிவோம். அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சயமாக ஒரு இழப்புதான். அதேபோல் நாக்பூர் முதல் டெஸ்டில் ஸ்டார்க் போன்ற ஒருவரின் ரிவர்ஸ் ஸ்விங்கை நாங்கள் தவற விடுவோம். அதே சமயத்தில் எங்களிடம் சரியான மாற்றாக லான்ஸ் மோரிஸ் இருக்கிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது அவருக்கு ஒரு கனவாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.