இதனை ஒரு அதிசயம் என்று தான் கூற வேண்டும் - ஆஷா சோபனா!

Updated: Mon, Jun 17 2024 20:49 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணி ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 117 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் அயபொங்கா காக்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனே லூஸ் 33 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனை ஆஷா சோபனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இந்நிலையில் தனது அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து பேசிய ஆஷா சோபனா, “என்னிடம் தற்போது பேச வார்த்தைகளே கிடையாது. ஏனேனில் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது ஒரு நாள் கிரிக்கெட்டை இதுநாள் வரை நான் டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அப்போது நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.

இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு ஒரு கனவு. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன். எனது முதல் சர்வதேச விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்த தருணம். ஏனெனில், சில நாள்களுக்கு முன் நான் என்சியாவில் இருந்த போது ஜெமிமாவிடம் உரையாடிக்கொண்டிருந்தேன்.

அப்போது நான் அவரிடம், எனது அறிமுக விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட் இருக்க வேண்டும் என்று கூறினேன். நீங்கள் எந்தப் போட்டியில் விளையாடினாலும், மரிஸான் கேப்பின் விக்கெட்டைப் பெறுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளதுடன், தற்போது விளையாடி வரும் அனுபவ வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவரும் கூட. அவரைது விக்கெட்டை வீழ்த்த கடவுள் கருணை காட்டியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை