முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி!

Updated: Tue, Feb 27 2024 14:34 IST
முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக ஜொலித்தவர். அதிலும் குறிப்பாக 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி விளையாடிய ஷமி  24 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார். இதில் 3 போட்டிகளில் 5+ விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷமி மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயத்திலிருந்து மீளாததால் இத்தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

இந்நிலையில் தனது காயத்திற்காக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்த முகமது ஷமிக்கு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் முகமது ஷமியும் தனது சமூக வலைதளப்பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளனர். 

அதேசமயம் இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவர் மீண்டும் முழு உடற்தகுதியை எட்ட மூன்று மாதங்கள் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களிலும் முகமது ஷமியால் பங்கேற்க முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதியும், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இதையடுத்து முகமது ஷமி விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன் முகமது ஷமி. தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பதிவுசெய்துள்ளார். இந்நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை