பிசிசிஐ அரசியலில் சிக்கினாரா சவுரவ் கங்குலி?

Updated: Wed, Oct 12 2022 09:39 IST
Image Source: Google

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் வரும் 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனைக் கூட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதிய தலைமையை தேர்வு செய்வது குறித்து இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டன. அதில் சவுரவ் கங்குலி மீண்டும் பிசிசிஐ தலைவராகவே நீடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஏற்காத மற்ற உறுப்பினர்கள் 2ஆவது வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை. எனவே அவர் பதவின் காலம் முடிவது உறுதியாகியுள்ளது.

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் அசத்திய ரோஜர் பின்னி தான் பிசிசிஐ-ன் அடுத்த தலைவராக நியமிக்கப்படவுள்ளார். செயலாளராக மீண்டும் ஜெய் ஷா வே நீடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்காததால் எந்தவித தேர்தலும் இன்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் சவுரவ் கங்குலிக்கு ஐபிஎல் குழு தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் துணை கவுன்சிலின் தலைவராக தன்னால் செயல்பட முடியாது என கங்குலி தெரிவித்துவிட்டார். மற்றொருபுறம் அவரை சமாதானப்படுத்துகிறோம் என அசிங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருக்கான பதவியும் காலியாகவுள்ளது. இதற்காக இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை தேர்தலில் நிற்கவைக்க வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் பிசிசிஐ-க்கு அதிக செல்வாக்கு உள்ளதால் பதவி கிடைத்துவிடும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை