மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸின் கேப்டனாக பூரனும், கேப்டவுன் அணியின் கேப்டனாக பொல்லார்டும் நியமனம்!

Updated: Sun, Jan 07 2024 22:47 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐஎல்டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் என்ற அணி உள்ளது. அதே போல தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் என்ற அணியும், அமெரிக்க டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் என்ற அணியும் மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமானதாக உள்ளது.

இதில் ஐஎல்டி20 மற்றும் நியூயார்க் அணிகளின் கேப்டனாக கீரான் பொல்லார்டு இருந்து வந்தார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் 14 ஆண்டு காலமாக இருந்தும் வரும் வீரர். அடுத்து அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நியூயார்க் அணி மற்றும் எமிரேட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். கேப் டவுன் அணியின் கேப்டனாக ரஷித் கான் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், தற்போது ஒரே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா டி20 மற்றும் ஐஎல்டி20 தொடர் நடைபெற உள்ளது. ரஷித் கான் சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதால் அவரால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் பங்கேற்க முடியாது. எனவே, பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத அந்த தொடருக்கு கேப்டனாக கீரான் பொல்லார்டை நியமித்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

அதிக பணம் ஈட்டும் முக்கியமான தொடரான ஐஎல்டி20 தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை கேப்டனாக நியமித்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். நிக்கோலஸ் பூரன் கடந்த ஆண்டு நியூயார்க் அணியின் கேப்டனாக பிளே-ஆஃப் சுற்றில் அபாரமாக செயல்பட்டு இருந்தார். எனவே, அவரை இனி அணியின் எதிர்காலமாக கருதி ஐஎல் டி20 தொடரில் எமிரேட்ஸ் அணியின் கேப்டன் பதவியை அளித்துள்ளது. 

அவர் அடுத்த சீசன் அமெரிக்க டி20 தொடரில் நியூயார்க் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு எதிர்காலத்தை மனதில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது போல, மற்ற டி20 தொடர்களிலும் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. 

ரஷித் கான் அடுத்த சீசனில் அணிக்கு திரும்பும் போது பொல்லார்ட் அந்த அணியில் இருந்தும் நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று காலை பொல்லார்ட், "விசுவாசமாக இருப்பது என்பது மழைக்கு பிடிக்கப்படும் குடை போல. மழை விட்ட உடன் குடை சுமையாக மாறி விடும்" எனக் குறிப்பிட்டு சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்தார். தற்போது அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை