வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்பின் களமிறக்கிய தென் ஆப்பிரிக்க அணியானது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ரியான் ரிக்கெல்டன் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
ஆனால் அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 5 ரன்களுக்கும், டோனவன் ஃபெரீரா 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஸ்டப்ஸுடன் இணைந்த பேட்ரிக் க்ரூகரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பேட்ரிக் க்ரூகர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் அபாரமாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 174 ரன்களைச் சேர்த்து அசத்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதானாஸ் - ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிக் அதானாஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் அபாரமாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.
அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாய் ஹோப்பும் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெலும் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தொடர்ந்து வானவேடிக்கை காட்டிவந்த நிக்கோலஸ் பூரன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.