டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய பிரபாத் ஜெயசூர்யா!

Updated: Fri, Apr 28 2023 20:22 IST
Image Source: Google

இலங்கை - அயர்லாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்து இலங்கை அணி வென்றது. 2 டெஸ்ட் போட்டிகளிலுமே இலங்கை அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, 2ஆவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 492 ரன்களை குவித்தது. கேப்டன் பால்பிர்னி 95 ரன்கள் அடித்தார். கர்டிஸ் காம்ஃபெர் 111 மற்றும் பால் ஸ்டர்லிங்கின் 103 அபாரமான சதங்களால் 492 ரன்களை குவித்தது அயர்லாந்து அணி. இலங்கை அணியில் அபாரமாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூரியா 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, நிஷான் மதுஷ்கா 205, குசால் மெண்டிஸ் 245 ஆகிய இருவரின் அபாரமான இரட்டை சதங்கள் மற்றும் கேப்டன் கருணரத்னே 115, ஆஞ்சலோ மேத்யூஸ் 100 ஆகிய இருவரின் சதங்களால் முதல் இன்னிங்ஸில் 704 ரன்களை குவித்தது. 212 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் வீழ்த்திய இலங்கை ஸ்பின்னர் பிரபாத் ஜெயசூரியா 50 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். வெறும் ஏழே டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய பிரபாத் ஜெயசூரியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய முதல் ஸ்பின்னர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், ரவிச்சந்திரன் அஷ்வின், நேதன் லையன் என டெஸ்ட் கிரிக்கெட்டின் எப்பேர்ப்பட்ட ஸ்பின் லெஜண்டும் இவ்வளவு வேகமாக 50 விக்கெட்டுகளை டெஸ்ட்டில் வீழ்த்தியதில்லை.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை