ரங்கனா ஹேரத்தின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!

Updated: Sat, Feb 08 2025 13:36 IST
Image Source: Google

இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 85 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 74 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், லையன், குஹ்னெமன் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கும், மார்னஸ் லபுஷாக்னே 4 ரன்களுக்கும், உஸ்மான் கவாஜா 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் சதமடித்து அசத்த, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 131 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 156 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 414 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளையும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி பிரபாத் ஜெயசூர்யா தனது 20ஆவது டெஸ்ட் போட்டியில் 11ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் கலே சர்வதேச மைதானத்தில் ஒன்பதாவது முறையாக தனது 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே மைதானத்தில் ஒரே இன்னிங்ஸில் அதிக எண்ணிக்கையிலான ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அவர் இப்போது மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இதன்மூலம் காலே மற்றும் கொழும்பு கிரிக்கெட் மைதானங்களில் தலா ஒன்பது முறை ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் வீரர் ரங்கனா ஹேரத்தின் சாதனையை ஜெயசூர்யா சமன்செய்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜம்பவான் முத்தையா முரளிதரன் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளார். அவர் கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் 14 முறையும், கண்டி மற்றும் கலே கிரிக்கெட் மைதானங்களில் தலா 11 முறையும் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முரளிதரன் தனது டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் 67 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை