ஸ்டீவ் ஸ்மித்திற்கு அதிர்ச்சி கொடுத்த பிரஷித் கிருஷ்ணா - வைரலாகும் காணொளி!
இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் மற்றும் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்வதற்கு ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் இலக்காக உள்ளது. ஆனால் அந்த இலக்கை இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் கடினமாக மாற்றி வருகின்றனர். ஏனெனில் மூன்றாவது நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி வெறும் 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் குறிப்பாக மதிய உணவுக்கு முன், ஆஸ்திரேலிய அணி சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா வீழ்த்தினார். அதிலும் சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் சுமாரான பந்தில் விக்கெட்டை இழக்க, ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் மட்டும் பிரஷித் கிருஷ்ணாவின் மிகவும் அற்புதமான பந்தில் வந்தது.
அதன்படி ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசிய நிலையில், ஓவரின் கடைசி பந்தை ஸ்டீவ் ஸ்மித் எதிர்கொண்டார். அந்த பந்தை பிரஷித் கிருஷ்ணா பவுன்சராக வீசிய நிலையில் அது கூடுதல் பவுன்சாகி ஸ்மித்தின் முகத்திற்கு நேராக சென்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டீவ் ஸ்மித் அதனை தடுக்கும் முயற்சியில் பேட்டை நீட்ட, அது பேட்டில் எட்ஜாகி கல்லி திசையில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் கைகளில் தஞ்சமடைந்தது.
இதனால் இப்போட்டியில் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது விக்கெட்டை இழந்ததுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை எட்டும் வாய்ப்பையும் ஒரு ரன்னில் தவறவிட்ட ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை பிரஷித் கிருஷ்ணா கைப்பற்றிய காணொளியானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய பேட்டர்கள் சொதப்பிய காரணத்தால் 157 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.