ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் பிரஷித் கிருஷ்ணா!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 23, 2024 அன்று, வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா தனது இடது தொடையில் அறுவை சிகிச்சை செய்தார். தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ள அவர், விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு செயல்முறையைத் தொடங்குவார். இதன் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு வீரர்கள் ஏலத்தில் பிரஷித் கிருஷ்ணாவை ரூ.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்த நிலையில், கடந்த சீசனில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனையடுத்து அவருக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் பிரஷித் கிருஷ்ணா நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்றைய தினம் அறிவித்திருந்தார். அதேசமயம் கார் விபத்தில் சிக்கி கடந்த ஓராண்டு காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நட்சத்திர வீரர் ரிஷப் பந்து, தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழு உடற்தகுதியை எட்டியதுடன், விக்கெட் கீப்பர் பேட்டராக செயல்படுவார் என்பதனை பிசிசிஐ இன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.