ஐபிஎல் 2022: நடத்தை விதிகளை மீறிய பிரித்விக்கு அபராதம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 196 ரன்கள் இலக்குடன் விளையாடிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது .
இந்த ஆட்டத்தில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதத்தை அபராதமாக அவர் செலுத்த வேண்டும்.
ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 லெவல் 1இன் கீழ் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதுடன் அனுமதியை ஏற்றுக் கொண்டதாகவும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெவல் 1 குற்றம் என்பது எதிரணியினர் அல்லது நடுவரிடம் எதிர்ப்பு சைகை காட்டுவது ஆகும்.
இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 5 ரன்களிலும் டேவிட் வார்னர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர் .