பிஎஸ்எல் 2021: ரஷீத், ஃபால்க்னர் அசத்தல்; லாகூர் கலந்தர்ஸுக்கு 144 ரன்கள் இலக்கு!
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 6ஆவது சீசன், இன்று இக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியது.
இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது.
இதையடுத்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர்களாக காலின் முன்ரோ - உஸ்மான் கவாஜா இணை களமிறங்கியது. அதன்பின் முன்ரோ 18 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் கலந்தர்ஸ் அணியின் ரஷீத் கான் 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணிக்கு நெருக்கடியை உருவாக்கினார்.
இதனால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் ஜேம்ஸ் ஃபால்க்னர் 3 விக்கெட்டுகளையும், ரவூப், அஹ்மத் தனியால் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லாகூர் கலந்தர்ஸ் ஆணி விளையாடவுள்ளது.