பிஎஸ்எல் 2021: ரஷீத் கான் அதிரடியில் லாகூர் கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது.
இதையடுத்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர்களாக காலின் முன்ரோ - உஸ்மான் கவாஜா இணை களமிறங்கியது. அதன்பின் முன்ரோ 18 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் கலந்தர்ஸ் அணியின் ரஷீத் கான் 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணிக்கு நெருக்கடியை உருவாக்கினார்.
இதனால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் ஜேம்ஸ் ஃபால்க்னர் 3 விக்கெட்டுகளையும், ரவூப், அஹ்மத் தனியால் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் ஆணிக்கு சோஹைல் அக்தர், முகமது ஹபீஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் கணக்கை உயர்த்தினர்.
பின்னர் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்தர் ஆட்டமிழக்க, 29 ரன்களில் முகமது ஹபீஸும் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிபெற 16 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது களமிறங்கிய ரஷீத் கான், ஹுசைன் தாலத் வீசிய முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசி அசத்தினார். இதன் மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ரஷீத் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.