PSL 2023: கராச்சி கிங்ஸை வீழ்த்தி குயிட்டா கிளாடியேட்டர்ஸ் த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கராச்சியில் நடைபெற்ற இன்றைய போட்டியில் கராச்சி கிங்ஸும் குயிட்டா கிளாடியேட்டர்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அப்துல் பங்கல்ஸாய்(0), உமர் அக்மல்(4), சர்ஃபராஸ் அகமது (5) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று நிதானமாக விளையாடிய மார்டின் கப்தில் அரைசதம் அடித்தார்.
அதிரடி வீரரான மார்டின் கப்தில், அண்மைக்காலமாக பெரியளவில் சோபிக்காமல் இருந்துவந்த நிலையில், இந்த போட்டி அவருக்கான கம்பேக் போட்டியாக அமைந்தது. ஆரம்பத்தில் நிதானம் காத்த கப்தில், அரைசதத்திற்கு பின் கராச்சி கிங்ஸ் பவுலிங்கை காட்டடி அடித்து சதம் விளாசினார். அரைசதத்திற்கு பின் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய கப்டில், 67 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 117 ரன்களை குவித்தார். அவருடன் 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஃப்திகார் அகமது ஓரளவிற்கு விளையாடி 32 ரன்கள் பங்களிப்பு செய்தார்.
மார்டின் கப்திலின் அதிரடி சதத்தால் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது. கராச்சி கிங்ஸ் தரப்பில் கேப்டம் இமாத் வாசீம், அமர் யமின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் சர்ஜில் கான், ஹைதர் அலி ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் வந்த ஜேம்ஸ் வின்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேத்யூ வேட் 15, இமாத் வாசீம் 5 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷோயிப் மாலிக் - இர்ஃபான் கான் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்துவதில் மும்முறமாக இறங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷோயிப் மாலிக் 39 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் இறுதிவரை போராடிய கராச்சி கிங்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷோயிப் மாலிக் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 71 ரன்களையும், இர்ஃபான் கான் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 26 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அனி 6 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.