PSL 2023: தொடக்க விழாவில் தீவிபத்து; ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Tue, Feb 14 2023 13:08 IST
Psl 2023: Fireworks Display Resulting Floodlight Towers Struck Watch Video (Image Source: Google)

ஐபிஎல் தொடரை போலவே பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தொடர் நேற்று முல்தானில் உள்ள மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆனால் டாஸ் போடுவதற்கே நீண்ட நேரம் ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

தொடக்க விழா என்பதால் பிரமாண்ட முறையில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது பட்டாசுகளை சரியாக கையாளததால் திடீரென மைதானத்தின் மின் விளக்குகள் மீது மோதி தீ பற்றி எறிந்தது. முதலில் சிறிய வெளிச்சம் போன்று இருந்ததை ரசிகர்களும், மைதான ஊழியர்களும் சகஜமாக எடுத்துக்கொண்டனர். ஆனால் பின்னர் தீ பரவத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக தீ அணைப்பு வாகனங்கள் மைதானத்திற்கு வெளியே கொண்டு வரப்பட்டு பணிகள் தொடங்கின. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக தீ அணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின்னரே டாஸ் போடப்பட்டது. எனினும் ரசிகர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் செய்யப்படுவதை போன்றே பாகிஸ்தானும் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது. அதில் ஒரு விஷயம் தான் இந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கைகள். ஆனால் அதனை சரியாக செய்யாமல் தொடக்க போட்டியையே தாமதமாக்கிவிட்டனர் என கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நிகழ்ச்சி தான் பரபரப்புடன் நடந்தது என்றால், போட்டியும் பரபரப்புக்கு பஞ்சமின்றி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய முல்தான்ஸ் அணியும் 6 விக்கெட்கள் இழப்புக்கு கிட்டத்த இலக்கை எட்டிவிட்டது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற சூழலில் 4 ரன்களை மட்டுமே அடித்ததால் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை