PSL 2023: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தியது கராச்சி கிங்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் ஹைதர் அலி 5 ரன்களில் ஆட்டமுழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது அஹ்லக் - தஹிர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அஹ்லக் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் ஆட்டமிழக்க, தஹிர் 40 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் வந்த இமாத் வாசீம் 45, பென் கட்டிங் 33 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. லாகூர் அணி தரப்பில் ஸமான் கான், ஹாரிஸ் ராவூஃப், ஹுசைன் தாலத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லாகூர் அணியில் ஃபகர் ஸமான், அப்துல்லா ஷஃபிக், காம்ரன் குலாம், சாம் பில்லிங்ஸ் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த ஹுசைன் தாலத் நிதானமாக விளையாடி 25 ரன்களைச் சேர்க்க மற்ற வீரர்களும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 18.5 ஓவர்களில் லாகூர் கலந்தர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.