PSL 2023: சதமடித்து மிரட்டிய மார்ட்டின் கப்தில்; சரிவை சமாளித்தது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது லீக் ஆட்டத்தில் இமாத் வாசீம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி, சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது..
அதன்படி கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் மற்றும் அப்துல் ஆகியோர் அடுத்தடுத்து முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தனர். அதபின் களமிறங்கிய கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மத், உமர் அக்மல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மார்ட்டின் கப்தில் - இஃப்திகார் அஹ்மத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மார்டின் கப்தில் அரைசதம் கடக்க, இஃப்திகார் அஹ்மத் 32 ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மார்ட்டின் கப்தில் 62 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்ட்டின் கப்தில் 67 பந்துகலில் 12 பவுண்டரி 5 சிக்சர்கள் என 117 ரன்களைக் குவித்தார்.
இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. கராச்சி கிங்ஸ் தரப்பில் கேப்டம் இமாத் வாசீம், அமர் யமின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.