PSL 2023: பொல்லார்ட் அரைசதம்; லாகூருக்கு 161 டார்கெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் குவாலிஃபையர் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு உஸ்மான் கான் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் உஸ்மான் கான் 29 ரன்களில் ஆட்டமிழக்க, 33 ரன்களைச் சேர்த்திருந்த முகமது ரிஸ்வானும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் வந்த கீரன் பொல்லார்ட் - டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கீரன் பொல்லார்ட் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 34 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குஷ்டில் ஷா ஸ்கோர் கார்டுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 22 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. லாகூர் தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.