PSL 2023: இறுதிவரை போராடியா கிளாடியேட்டர்ஸ்; 9 ரன்களில் சுல்தான்ஸ் வெற்றி!

Updated: Sun, Mar 12 2023 10:28 IST
PSL 2023: Records tumble for fun as Multan Sultans hammer Quetta Gladiators in Rawalpindi (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு உஸ்மான் கான் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் ருத்ரதாண்டவமாடிய உஸ்மான் கான் வெறும் 36 பந்துகளில் சதமடித்து, பிஎஸ்எல் தொடரில் அதிகவேகமகா சதமடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 

அவருடன் விளையாடிய முகமது ரிஸ்வானும் அரைசதம் கடந்தார். பின் 43 பந்துகளில் 12 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 120 ரன்களைச் சேர்த்திருந்த உஸ்மான் கான் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 55 ரன்களைச் சேர்த்திருந்த ரிஸ்வானும், 15 ரன்களுக்கு ரைலீ ரூஸோவும் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் - கீரன் பொல்லார்ட் இணையும் அதிரடி ஆட்டத்தை கையிலேடுக்க அணியின் ஸ்கோரும் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதில் இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாட, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 25 பந்துகளில் 43 ரன்களையும், கீரன் போல்லார்ட் 23 ரன்களையும் சேர்த்தனர்.கிளாடியேட்டர்ஸ் தரப்பில் கைஸ் அகமது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குயிட்டா அணியில் ஜேசன் ராய் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த மார்ட்டின் கப்தில் - ஒமைர் யூசுப் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கப்தில் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் ஒமைர் யூசுப் அரைசதம் கடந்தார். 

அதன்பின் முகமது ஹபீஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, ஒமைர் யூசுபும் 67 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இஃப்திகார் அகமது அதிரடியாக விளையாடிய 52 ரன்களை குவித்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் வந்த கைஸ் அகமது - நவீன் உல் ஹக் ஆக்கியோரும் தங்களால் முடிந்த அளவு போராட, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியால் 253 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக இருந்த அபாஸ் அஃப்ரிடி ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை