PSL 2023: ரைலீ ரூஸோவ் மிரட்டல்; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!

Updated: Sat, Mar 11 2023 10:09 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெறற 27ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பெஷாவர் அணிக்கும் சைம் அயூப் - பாபர் ஆசாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 134 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையிலும் அமைத்து அசத்தினர். 

அதன்பின் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 58 ரன்களை எடுத்திருந்த சைம் அயூப் ஆட்டமிழக்க, இப்போட்டியிலும் சதமடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 39 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 11 பந்துகளில் 4 சிக்சர்களை விளாசி 35 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் டாம் கொஹ்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் 38 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களைக் குவித்தது. முல்தான் அணி தரப்பில் அபாஸ் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி காளமிறங்கிய முல்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத், கேப்டன் முகமது ரிஸ்வான் இணை அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரைலீ ரூஸோவ் - கீரென் பொல்லார்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தினர். 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரூஸோவ் 17 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்த, மறுமுனையில் கீரென் பொல்லார்டும் தனது பங்கிற்கு 22 பந்துகளில் அரைசதம்  கடந்து மிரட்டினார். அதன்பின் 25 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 52 ரன்களைச் சேர்த்திருந்த பொல்லார்ட் ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த டிம் டேவிட், குஷ்தில் ஷா ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரைலீ ரூஸோவ் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். இதில் 51 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 12 பவுண்டரி, 8 சிக்சர்களை விளாசி 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இறுதியில் அன்வர் அலி, உசாமிர் இணையும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முல்தன் சுல்தான்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை