PSL 2023: தாலத்; அஃப்ரிடி போராட்டம் வீண்; பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!

Updated: Tue, Mar 07 2023 20:57 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பல்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் சயித் அயுப் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து 10.4 ஓவரில் 107 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி 36 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்தார். 

பின்னர் அரைசதம் அடித்த பாபர் அசாம் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் காட்டடி அடித்த டாம் கோஹ்லர் காட்மோர் 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களை விளாசினார். அவர் அவுட்டானபின் பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்ததால் 19.3 ஓவரில் பெஷாவர் ஸால்மி அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய லாகூர் கலந்தர்ஸ் அணி வெறும் 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின்னர் ஹுசைன் தாலட் மற்றும் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதில் அபாரமாக விளையாடிய ஷாஹீன் அஃப்ரிடி 36 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்தார். 

மறுபக்கம் ஹுசைன் தாலத் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்தார். ஆனால் அதன்பின்னர் மற்ற வீரர்கள் யாரும் சரியாக ஆடாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் லாகூர் அணி 19.4 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலாம் பெஷாவர் ஸால்மி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த லாகூர் அணிக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றது பெஷாவர் ஸால்மி அணி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை