PSL 2023: ஷான் மசூத், டிம் டேவிட் காட்டடி; இஸ்லாமாபாத்திற்கு கடின இலக்கு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 24ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பல்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் முகமது ரிஸ்வான் 18 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரைலீ ரூஸோவ் 15 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷான் மசூத் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருடன் இணைந்த டிம் டேவிட்டும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களுக்கு கெட்டகனவாக அமைந்தார். இதற்கிடையில் 50 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 75 ரன்களை எடுத்திருந்த ஷான் மசூத் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிம் டேவிட் 20 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். அதன்பின் 27 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 60 ரன்களைச் சேர்த்து கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது.