பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பெஷாவர்!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தன் சூப்பர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெஷாவர் ஸால்மி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய முகமது ஹாரிஸ் 20 ரன்களிலும், ஹசீபுல்லா கான் 6 ரன்களிலும் என என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் பாபர் ஆசாம் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய டாம் கொஹ்லர் கார்ட்மோர் தனது பங்கிற்கு 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அமர் ஜமால், மெஹ்ரான் மும்தாஸ், லூக் வூட் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரோவ்மன் பாவெல் 28 ரன்களையும், நவீன் உல் ஹக் 10 ரன்களையும் சேர்த்து ஃபினீஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்தது. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சௌத் சகீல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேசன் ராய் 16 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, 24 ரன்களில் சௌத் சகீலும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரைலீ ரூஸோவ், கவாஜா நஃபே, ஒமைர் யூசுஃப், லௌரி எவான்ஸ், அகீல் ஹொசைன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய சொஹைல் கான், முகமது அமிர், அப்ரார் அஹ்மத் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் குயிட்டா அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெஷாவர் அணி தரப்பில் சைம் அயூப், லூக் வுட், குர்ராம் ஷஷாத், மெஹ்ரன் மும்தாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் பெஷாவர் ஸால்மி அணி நடப்பு சீசன் பிஎஸ்எல் தொடரில் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.