பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி த்ரில் வெற்றி!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 46 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் கொஹ்லர் காட்மோரும் 5 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக ஹசீபுல்லா கானும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பாபர் ஆசாம் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஹசீபுல்லா கானும் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய் ஆசிஃப் அலியும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ரோவ்மன் பாவெல் 23 ரன்களையும், அமர் ஜமால் 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களைச் சேர்த்தது. முல்தான் அணி தரப்பில் உஸாமா மிர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு முகமது ரிஸ்வான் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் 5 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வானும் 32 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மாலன் 19 ரன்களுக்கும், தாஹிர் 26 ரன்களுக்கும், குஷ்தில் ஷா 11 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த இஃப்திகார் அஹ்மத் - கிறிஸ் ஜோர்டன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இஃப்திகார் அஹ்மத் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஃப்திகார் அஹ்மத் 27 பந்துகளிக் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 60 ரன்களையும், கிறிஸ் ஜோர்டன் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்களையும் சேர்த்தனர்.
ஆனாலும் கடைசி ஓவரில் முல்தான் அணி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதிவரை போராடிய அந்த அணியால் 18 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அனி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.