பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்ட் அதிரடி; கலந்தர்ஸை வீழ்த்தி கிங்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Sun, Feb 25 2024 11:28 IST
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்ட் அதிரடி; கலந்தர்ஸை வீழ்த்தி கிங்ஸ் த்ரில் வெற்றி! (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளத். இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ல கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 6 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் பின் களமிறங்கிய அஹ்சன் பாட்டி 8 ரன்களுக்கும்,  ஜஹந்தத் கான் 12 ரன்களுக்கும் என நடையைக் கட்டினார். 

பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடிய நிலையில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சிக்கந்தர் ரஸாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கிடையில் மறுமுனையில் நங்கூரம் போல் நின்று விளையாடி வந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.

அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபர்ஹான் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 72 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் ஹசன் அலி, தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் மிர் ஹம்ஸா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் ஷான் மசூத் 10 ரன்களிலும், முகமது அக்லக் 7 ரன்களிலும், ஜேம்ஸ் வின்ஸ் 8 ரன்களிலும், முகமது நவாஸ் 15 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த அனுபவ வீரர் சோயப் மாலிக் - கீரென் பொல்லார்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சோயப் மாலிக் 39 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் அதிரடியாக விளையாடிய கீரென் பொல்லார் அரைசதம் கடந்த நிலையில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர்கள் என 58 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேனியல் சம்ஸும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய இர்ஃபான் கான் 12 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த கீரென் பொல்லார்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை