பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!

Updated: Fri, Feb 23 2024 11:22 IST
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்! (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்ப லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் 21 ரன்களிலும், காலின் முன்ரோ 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து களமிறங்கிய ஆகா சல்மான் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஷதாப் கான் 2 ரன்களிலும், அஸாம் கான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, 33 ரன்களைச் சேர்த்திருந்த ஆகா சல்மானுல் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோர்டன் காக்ஸ் - ஃபஹீம் அஷ்ரஃப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் ஜோர்டன் காக்ஸ் 19 ரன்களுக்கும், ஃபஹீம் அஷ்ரஃப் 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் அப்ரார் அஹ்மத், இமாத் வசீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் சௌத் சகீல், கவாஜா நஃபே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ரைலீ ரூஸோவ் - ஜேசன் ராய் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராய் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதனைத்தொடர்ந்து சர்ஃப்ராஸ் அஹ்மத் ஒரு ரன்னிலும், ரூதர்ஃபோர்ட் 29 ரன்களிலும், அகீல் ஹொசைன் 8 ரன்களிலும், முகமது வசீம் ஜூனியர் ஒரு ரன்னிலெ என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரைலீ ரூஸோவ் 34 ரன்களைச் சேர்த்ததுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாச்சத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை