பிஎஸ்எல் 2024: ஷதாப், சல்மான் அரைசதம்; லாகூரை பந்தாடியது இஸ்லாமாபாத்!

Updated: Sun, Feb 18 2024 12:34 IST
Image Source: Google

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரை பின்பற்றி கடந்த 2015ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 8 சீசன்களைக் கடந்தது வெற்றிகரமான 9ஆவது சீசனில் காலடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற 9ஆவது சீசனின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்த்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய லாகூர் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஃபர்ஹானுடன் இணைந்த ரஸ்ஸி வேண்டர் டுசெனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 

அதன்பின் 57 ரன்களில் ஃபர்ஹான் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அப்துல்லா ஷஃபிக், டேவிட் வைஸ், கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் 4 பவுண்டர், 3 சிக்சர்கள் என 71 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த அலெக்ஸ் ஹேல்ஸ் - கேப்டன் ஷதாப் கான் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 36 ரன்களைச் சேர்த்திருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனைத்தொடர்ந்து ஷதாப் கானுடன் இணைந்த அகா சல்மானும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஷதாப் கான் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 74 ரன்களையும், அகா சல்மான் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 64 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை