பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பாபர் ஆசாம் ஒருபக்கம் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில் மறுபக்கம் சைம் அயூப் 4 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் கொஹ்லர் காட்மோர் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாமும் 7 பவுண்டரிகளுடன் 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய முகமது ஹாரிஸ் தனது பங்கிற்கு 28 ரன்களையும், ஹுசைன் தாலத் 18 ரன்னிலும், மிட்செல் ஓவன், அப்துல் சமத் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அல்ஸாரி ஜோசப் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அப்பாஸ் அஃப்ரிடி, குஷ்தில் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸும் 11 ரன்களில் நடையைக் கட்டினார். மறுபக்கம் கேப்டன் டேவிட் வார்னர் பொறுப்புடன் விளையாடி வந்த நிலையில், சைத் பக் 9 ரன்னிலும், இர்ஃபான் கான் 10 ரன்னிலும், முகமது நபி 14 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் அரைசதம் கடந்து அசத்திய டேவிட் வார்னரும் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் குஷ்தில் ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த குஷ்தில் ஷா ஆட்டநாயகன் விருதை வென்றார்.