ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடரே சிறந்தது- நஜாம் சேதி!
பாகிஸ்தானின் பிரபல பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் கடந்த ஒரு மாதமாக அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தல் லாகூர் அணி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 200/6 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து 201 ரன்களை துரத்திய முல்தான் அணி கடைசி வரை போராடி வெறும் 1 ரன்னில் தோல்வியைத் தழுவியது. அதேசமயம், த்ரில் வெற்றி பெற்ற லாகூர் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து 2ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அப்படி பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரை டிஜிட்டல் வாயிலாக 150 மில்லியன் ரசிகர்கள் பார்த்ததாக தெரிவிக்கும் பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் சேதி 2023 பிஎஸ்எல் தொடர் 130 மில்லியன் ரசிகர்கள் மட்டும் பார்த்த ஐபிஎல் தொடரை மிஞ்சியதாக கூறியுள்ளார். அதாவது 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 8வது சீசனை 130 மில்லியன் ரசிகர்கள் மட்டுமே பார்த்ததாக தெரிவிக்கும் அவர் தற்போதைய பிஎஸ்எல் தொடரின் 8ஆவது சீசனை 150 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் டிக்கெட் விற்பனையில் இம்முறை சாதனை நிகழ்ந்துள்ளது. அதே போல் டிஜிட்டல் பற்றி பேசும் போது பிஎஸ்எல் தொடர் தற்போது பாதி நிலையில் தான் இருக்கிறது. இந்த நிலைமையில் பொதுவாக 0.5 என்றளவில் இருக்கக்கூடிய பிஎஸ்எல் தொடரின் டிவி ரேட்டிங் தற்போது 11 தாண்டியுள்ளது.
இது வரும் காலங்களில் 18 அல்லது 20 தாண்டலாம். 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இத்தொடரை டிஜிட்டல் நுட்பத்தில் பார்த்துள்ளனர். இது அவ்வளவு சிறியதல்ல. இதே சமயத்தில் ஐபிஎல் தொடரின் டிஜிட்டல் ரேட்டிங் 130 மில்லியனாகும். ஆனால் பிஎஸ்எல் தொடர் 150 கடந்துள்ளது. எனவே இது பாகிஸ்தானின் பெரிய வெற்றியாகும்” என்று கூறினார்.