விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹைதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி!

Updated: Sat, Jan 04 2025 05:58 IST
Image Source: Google

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் கேப்டன் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 93 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுமுனையில் அதிரடியைக் கைவிடாத பிரப்ஷிம்ரன் சிங் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 20 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 137 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரப்ஷிம்ரன் சிங்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அன்மோல்ப்ரீத் சிங் 46 ரன்களிலும், ரமந்தீப் சிங் 80 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நெஹல் வதேரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். 

இதன்மூலம் பஞ்சாப் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 426 ரன்களைக் குவித்தது. அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் கே நிதிஷ் ரெட்டி ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுமுனையில் களமிறங்கிய அரவெல்லி அவனிஷ் 19 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கேப்டன் திலக் வர்மா 28 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கிய நிதிஷ் ரெட்டி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 111 ரன்களை எடுத்திருந்த நிதிஷ் ரெட்டி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் தனாய் தியாகராஜன் 74 ரன்களையும், அனிகேத் ரெட்டி 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ஹைதராபாத் அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 346 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ராகு சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பஞ்சாப் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை