PSL 2023: ஷாஹீன் அஃப்ரிடி அபாரம்; லாகூர் கலந்தர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Mon, Feb 27 2023 10:35 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில்  லாகூர் கலந்தர்ஸும், பெஷாவர் ஸால்மி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் மிர்ஸா தாஹிர் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - அப்துல்லா ஷஃபிக் இணை அபார மான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். 

அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அப்துல்லா ஷஃபிக் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 75 ரன்களை எடுத்த நிலையில் வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இதற்கிடையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 45 பந்துகளில் 10 சிக்சர், 3 பவுண்டரிகள் என 96 ரன்களில் ஆட்டமிழந்து 4 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் பின்னர் வந்த டேவிஸ் வைஸ் ஒரு சில பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 47 ரன்களைச் சேர்த்தார். பெஷாவர் அணி தரப்பில் வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணியில் முகமது ஹாரிஸ், கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாய்ம் அயுப் - டாம் கொஹ்லர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மாளமளவென உயர்த்தினர். 

இதில் 21 பந்துகளில் அரைசதம் கடந்த கொஹ்லர் 55 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 51 ரன்களில் சாய்ம் அயூப்பும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த பனுகா ராஜபக்ஷ 24, ரோவ்மன் பாவெல் 20 ரன்களிலும், ஜேம்ஸ் நீஷம் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 201 ரன்களை மட்டுமே சேர்த்தது. லாகூர் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை