‘பள்ளி மாணவிக்கு ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை’ கண்டனம் தெரிவித்த அஸ்வின்!
சென்னையில் பிரபலமான பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக இருந்தவர் ராஜகோபாலன். இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொல்லைக்குள்ளான மாணவிகள் பலர் சமூக வலைதளங்களின் புகார்கள் தெரிவித்தனர். அதில், "ராஜகோபாலன் பல ஆண்டுகளாக இவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுத்ததார். ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போது ஆபாசமாக பேசி வருவார்" என தெரிவிருந்தனர்.
இப்புகாரின் பேரில், மடிப்பாக்கத்தில் இருந்த ஆசிரியர் ராஜகோபாலை அழைத்து சென்ற காவல்துறையினர், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணி வரை அவரிடம் நடந்த விசாரணையில், அவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், அப்பள்ளியில் உள்ள சில ஆசிரியர்களும் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப் பிரிவு, 354(ஏ) பாலியல் தொல்லை, பிரிவு 12 (ஜாமீன் கிடையாது) உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர் .
இணைய வகுப்பில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளான சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் “தனியார் பள்ளியின் பழைய மாணவராக மட்டுமல்லாமல், 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் குழப்பமான இரவுகளைக் கழித்தேன்.ராஜகோபாலன் (குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்) என்பது இன்று வெளிவந்த ஒரு பெயர், ஆனால் எதிர்காலத்தில் நம்மைச் சுற்றி இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, நாம் இப்போதிலிருந்தே செயல்பட வேண்டும் மற்றும் அமைப்பின் முழுமையான மாற்றம் தேவை” எனத் தெரிவித்துள்ளார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.