SA vs IND: இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிராஜ் பங்கேற்பாரா?
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
பேட்டிங்கில் தான் அதிர்ச்சி கொடுத்தது என்று பார்த்தால், முதல்நாள் ஆட்ட நேர முடிவில் பவுலிங்கிலும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு திடீரென காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. களத்திலேயே வலி தாங்க முடியாமல் இருந்த சிராஜ், உடனடியாக வெளியே அழைத்துச்செல்லப்பட்டார்.
இதனால் இன்று நடைபெறும் 2ஆவது நாள் ஆட்டத்தில் சிராஜால் பங்கேற்க முடியுமா, பவுலிங் செய்ய முடியுமா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தொடையின் பின் பகுதியில் தசை பிடித்திருந்ததால், அது குணமடைய சில நேரங்கள் எடுக்கும் எனவும் உடனடியாக களத்திற்குள் சென்றால் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறினர். எனினும் பிசிசிஐ இந்த விவகாரத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் சிராஜின் காயம் குறித்து பேசியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், “நான் பிசியோதெரபிஸ்ட் உடன் பேசினேன். காயம் ஏற்பட்ட உடன் தசைப்பிடிப்பு பகுதியில் ஐஸ் வைத்து பார்த்துள்ளனர். அதன் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு, நேற்று இரவு முழுவதும் முகமது சிராஜ் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் இன்று களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்” எனக்கூறியுள்ளார்.
இரண்டாவது டெஸ்டில் இன்னும் 4 நாட்கள் மீதமுள்ளன. ஒருவேளை முகமது சிராஜால் களமிறங்க முடியவில்லை என்றால் ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் தான் தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்த வேண்டும். சிராஜ் இல்லாததால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அதிக ஓவர்கள் வீச வேண்டிய வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.