TNPL 2024: மீண்டும் அரைசதம் விளாசிய அஸ்வின்; கோவையை வீழ்த்தி பட்டத்தை வென்றது திண்டுக்கல்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 22 ரன்களைச் சேர்த்திருந்த சுஜயும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய முகிலேஷ் ரன்கள் ஏதுமின்றியும், சாய் சுதர்ஷன் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 81 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ராம் அரவிந்த் - அதீக் உர் ரஹ்மான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.
இருவரும் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ராம் அரவிந்தும் 27 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த முகமது மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், ஓரளவு ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது 15 ரன்களையும், சித்தார்த் 7 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிரப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு விமல் குமார் - ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷிவம் சிங் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 9 ரன்கள் எடுத்த நிலையில் விமல் குமாரும் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். மேற்கொண்டு இருவரும் பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பாபா இந்திரஜித் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் எலிமினேட்டார், குவாலிஃபையர், இறுதிப்போட்டி என அடுத்தடுத்து மூன்று அரைசதங்களை ரவிச்சந்திரன் அஸ்வின் விளாசியுள்ளார். அவருடன் இணைந்த சரத் குமாரும் அதிரடியாக விளையாட திண்டுக்கல் அணியின் வெற்றியும் உறுதியானது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சரத் குமார் 27 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.