இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இமாலய சாதனைக்கு காத்திருக்கும் அஸ்வின்!

Updated: Tue, Jan 30 2024 14:33 IST
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இமாலய சாதனைக்கு காத்திருக்கும் அஸ்வின்! (Image Source: Google)

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடரின் முதல் போட்டியிலேயே படுதோல்வியைச் சந்தித்துள்ளதால் அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் காயம் காரணமாக நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இப்போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்து. 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளை நிகழ்த்த வாய்ப்புள்ளது. அதன்படி இதுவரை இந்திய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 496 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார். 

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 87 போட்டிகளில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் அனில் கும்ப்ளே 105 போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது கவணிக்கதக்கது.

அதேசமயம் இப்போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார். இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 139 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை