SA vs BAN, 2nd ODI: டி காக், வெர்ரைன் அதிரடி; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய வங்கதேச அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் அந்த அணியின் அஃபிஃப் ஹொசைன் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரைசதம் கடந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அஃபிஃப் ஹொசைன் 72 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு டி காக் - ஜென்மேன் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதில் மாலன் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த டி காக் அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய கைல் வெர்ரைனும் அரைசதம் கடக்க தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றி உறுதியானது.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 37.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது.