உலகக்கோப்பை 2023: சாதனைப் படைத்த ரச்சின் ரவீந்திரா!

Updated: Thu, Oct 05 2023 22:40 IST
Image Source: Google

இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இன்று விளையாடியது. கடந்த 2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதிய அணிகள் என்ற அடிப்படையில் இந்த இரு அணிகளும் முதல் போட்டியில் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 282 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

பேட்டிங் செய்ய எளிதான ஆடுகளத்திலேயே அந்த அணி குறைவான ரன்களை எடுத்தது. அடுத்து நியூசிலாந்து அணி சேஸிங் செய்ய வந்தது. அந்த அணியின் துவக்க வீரர் வில் யங் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்தார் ரச்சின் ரவீந்திரா. மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வேயுடன் கூட்டணி அமைத்த ரவீந்திரா அதிரடி ஆட்டம் விளையாடினார். 

இருவருமே தொடர்ந்து ஒரு ஓவருக்கு 8 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் குவித்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் சதம் அடித்தனர். இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா 23 வயதில் தான் ஆடும் முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே சதம் அடித்தார். இந்தப் போட்டியின் முடிவில் ரச்சின் 123 ரன்கள் எடுத்தும், கான்வே 152 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மேலும் இப்போட்டியில் சதமடித்ததுடன், இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய ரச்சின் ரவீந்திர ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியில்  82 பந்துகளில் சதம் கடந்த ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக உலகக்கோப்பை போட்டியில் விரைவாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குறைந்த வயதில் சதமடித்த 3ஆவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை