BAN vs SL : முஷ்பிக்கூர் சதத்தால் தொடரை வென்றது வங்கதேசம்!

Updated: Wed, May 26 2021 15:13 IST
Image Source: Google

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பால் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹீம் - மஹ்மதுல்லா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிக்கூர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 127 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹீம் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் வங்கதேச அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை குவித்தது. இலங்கை அணி தரப்பில் சமீரா, சண்டகன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி இம்முறையும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணியின் தோல்வி உறுதியானது. 

இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் 40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 

இதன்மூலம் வங்கதேச அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாளை தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிக்கூர் ரஹீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை