மைதானத்தில் நிலைதடுமாறிய குர்பாஸ்; சகா வீரர் தூக்கிச் சென்ற வைரல் காணொளி!
இன்று பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. இரு அணிகளும் கடந்த முறை ஆசிய கோப்பை போட்டியில் மோதிய போது,இரு அணிகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதற்கு காரணம் ஆஃப்கானிஸ்தான் தான் என்று பாகிஸ்தான் வீரர்கள் குற்றஞ்சாட்டினர். இதனிடையே, இவ்விரு அணிகளும் மீண்டும் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இது சாதாரண போட்டியாக இருந்தாலும், கடந்த கால பகை காரணமாக, இது ஒரு முக்கிய போட்டி போல் ரசிகர்கள் கவனம் செலுத்தினர். இன்றைய ஆட்டத்தில் ஷாஹீன் ஆஃப்ரிடி எப்படி பந்துவீசப் போகிறார் என்று ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டனர்.
ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் 2 ஓவர்களை வீசிய ஷாகின் ஆப்ரிடி விக்கெட் ஏதும் கைப்பற்மல் 7 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இன்றைய ஆட்டத்திலும் முதல் ஓவரை ஷாகின் ஆப்ரிடி வீசினார். இதில் ஆட்டத்தின் 4ஆவது பந்தை குர்பாஸ்க்கு ஆஃப்ரிடி வீசினார். அசுர வேகத்தில் பேட்ஸ்மேனின் காலை அந்த பந்து பதம் பார்த்தது.
இதற்கு நடுவர்கள் எல்பிடபிள்யூ கொடுத்தனர். அப்போது குர்பாஸ் வலியால் துடித்தார். அவரால் நடந்து பெவிலியனுக்கு கூட செல்ல முடியவில்லை. இதனையடுத்து சக நாட்டு வீரர், குர்பாஸை தோளில் சுமந்து பெவிலியனுக்கு அழைத்து சென்றார். தற்போது குர்பாஸ், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஸ்கேன் பரிசோதனை நடக்கப்பட உள்ளது.
இதில் எலும்பு முறிவு அல்லது தெறிப்பு ஏற்பட்டு இருந்தால், அவர் டி20 உலககோப்பை தொடரிலிருந்து விலகும் நிலை ஏற்படும். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 3ஆவது ஓவரை வீசிய ஷாஹீன் ஆஃப்ரிடி , ஹசரத்துல்லாவை 9 ரன்களில் கிளின் போல்ட் ஆக்கினார்.
இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.