பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து சாதனைகளை குவித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்!
பாகிஸ்தானுக்கு மற்றும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பொதுவான இடமான இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் தொடங்கும் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே பாகிஸ்தான் வெற்றி பெற்ற ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் ஆரம்ப முதலே நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் பவர் பிளே முடிந்தும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று ஹரிஷ் ரவூப், நசீம் ஷா போன்ற பாகிஸ்தானின் தரமான பவுலர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆப்கானிஸ்தானை வலுப்படுத்தினர். அதில் சற்று அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் ஆளாக சதமடித்து அசத்திய நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான் 39.5 ஓவர்கள் வரை நின்று 227 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட ரஹ்மத்துல்லா குர்பாஸ் 14 பவுண்டரி 3 சிக்ஸருடன் 151 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் முகமது நபி 29 ரன்களும் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை எடுத்தது.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்ததுடன் 151 ரன்களை குவித்து முக்கிய பங்காற்றிய ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற சரித்திரமும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த ஆஃப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார்.
மேலும் இலங்கையின் ஹம்பன்தோட்டா மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். இந்த மைதானத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு குமார் சங்ககாரா 133 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், ரஹ்மனுல்லா குர்பாஸ் 151 ரன்களை குவித்து புதிய சாதனையைப் பதிவுசெய்துள்ளார்.
அத்துடன் 23 இன்னிங்ஸில் தன்னுடைய 5ஆவது சதத்தை பதிவு செய்துள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 5 சதங்களை அடித்த 2ஆவது வீரர் என்ற பாபர் ஆசாமின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 25 இன்னிங்ஸில் 5 சதங்கள் அடித்திருந்த பாபர் அசாம் தற்போது அந்த பட்டியலில் 3ஆவது இடத்திற்கு சென்றுள்ள நிலையில், குயின்டண் டீ காக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் தலா 19 இன்னிங்ஸில் 5 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்கள்.