எல்லா போட்டிகளிலும் எளிதா ரன்களை குவித்திட முடியாது - டிராவிட் ஓபன் டாக்
தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இலங்கை அணியுடனான டி20 தொடர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து பேசிய டிராவிட்“அவர்கள் இளம் வீரர்கள் என்பதால் நான் எந்தவித ஏமாற்றமும் அடையவில்லை. இது மாதிரியான ஆடுகளங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடினால் தான் தங்களது ஆட்டத்தில் சில விஷயங்களை கற்றுக் கொண்டு அதன் மூலம் சிறந்த வீரர்களாக உருவாவார்கள்.
இது மாதிரியான ஸ்லோ டிரேக்கில் எப்படி ஆட வேண்டுமென்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடுவது அவசியம். அனைத்து போட்டிகளிலும் ரன்களை குவித்துவிட முடியாது.
இளம் வீரர்களுக்கு திறம்பட ஆடும் திறன் இருந்தாலும் அனுபவம் மிகவும் முக்கியம். தவானை தவிர கடந்த இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய அனைவரும் இளம் வீரர்கள். எதிர்வரும் நாட்களில் ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்து அவர்கள் சிறப்பான வீரர்களாக உருவாவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.