சூரியகுமார் யாதவ் முற்றிலும் தனித்துவமான பேட்ஸ்மேன் - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளுடன் குரூப் இரண்டில் முதலிடம் பிடித்து அரையிறுதி சுற்று முன்னேறியுள்ளது. அந்த வகையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சூரியகுமார் யாதவ் திகழ்ந்தார். இந்த போட்டியில் வெறும் 25 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த ஆட்டத்திற்கு பலரது மத்தியிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இவ்வேளையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சூரியகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “சூரியகுமார் யாதவ் முற்றிலும் தனித்துவமான பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அவர் நல்ல பார்மில் இருக்கும்போது அவருடைய பேட்டிங்கை பார்ப்பது ஒவ்வொரு முறையும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் விளையாடும் போது ஒரு புது நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இருக்கிறது.
டி20 கிரிக்கெட்டில் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசுவது என்பதெல்லாம் நம்ப முடியாத ஒன்று. அதனால்தான் அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார். இந்த தொடரில் கோலிக்கு அடுத்து சூரியகுமார் யாதவ் தான் இந்திய அணிக்கு அதிக ரன்களை ஸ்கோர் செய்துள்ளார்.
அவர் ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்னரும் தனது உடலை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார். உடற்பயிற்சிக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதெல்லாம் பார்க்கும்போது அவருடைய இந்த கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகத்தான் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை நான் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.