டி20 உலகக்கோப்பை 2024: கேள்விக்குறியாகும் ஹர்திக் பாண்டியா இடம்?

Updated: Tue, Apr 16 2024 15:31 IST
டி20 உலகக்கோப்பை 2024: கேள்விக்குறியாகும் ஹர்திக் பாண்டியா இடம்? (Image Source: Google)

ஐசிசி-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன். அந்தவகையில் இத்தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளூம் அதிகரித்துள்ளது. 

அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் வீரர்களின் ஃபார்மின் அடிப்படையிலேயே இந்திய அணி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பிடிக்க வேண்டும் எனில் அவர் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் அடங்கிய குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் ஹ்ர்திக் பாண்டியா பேட்டிங்கில் ஓரளவு செயல்பட்டாலும், அவரது பந்துவீச்சானது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதன்படி இந்த சீசனில் அவர் விளையாடியுள்ள 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே பந்துவீசியுள்ளார். ஆனால் அந்த நான்கு போட்டிகளிலும் அவரது பந்துவீச்சில் ரன்கள் வாரி வழங்கியுள்ளார் என்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளனது. 

இதனால் அகர்கர், ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மூவரும் இணைந்து ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வாளர்கள் மேலும் சில வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில்,  ஹர்திக் பாண்டியா தொடர்ந்து பந்துவீசவில்லை என்றால், டி20 உலகக் கோப்பைக்கான அவரது தேர்வும் கேள்விகுறியாகும் என கருதப்படுகிறது.

இருப்பினும், இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் தேவை என்பது உண்மைதான், ஏனெனில் அவர் அணிக்கு சமநிலையை வழங்குகிறார். ஆனால் அவர் பந்துவீசவில்லை என்பது மும்பைக்கு மட்டுமல்ல, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கும் தலைவலியை கொடுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பாண்டியாவைத் தவிர, தேர்வாளர்கள் மற்ற வீரர்களையும் பார்த்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஷுவம் துபே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணியில் உள்ளார்.

 

ஷிவம் துபே ஒரு இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதைத் தவிர, ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்ஸர்களை அடிக்கும் திறமையும் அவரிடம் உள்ளது. மேலும் இந்த சீசனில் மும்பைக்கு எதிரான போட்டியில், வேகப்பந்து வீச்சாளர்களையும் அவர் எளிதாக சிக்ஸர்களை அடித்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது வரை ஹர்திக் பாண்டியாவுக்கும் ஷிவம் துபேக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

இதில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் சிறப்பாக செயல்படாதது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ஷிவம் தூபே இதுவரை இந்த தொடரில் பந்து வீசவில்லை என்பது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தேர்வாளர்கள் இனி வரவிருக்கும் போட்டிகளில் இருவரது மீதும் அதிகபடியான கவனத்தை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படவில்லை எனில் அவரு நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பது சிரமம் தான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை