இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் -தகவல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்த அணி இம்மாத இறுதியில் இங்கிலாந்திற்கு செல்லவுள்ளது.
இந்நிலையில் முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி ஜூலை மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதனால் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்குச் செல்லும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேசயம் இலங்கைச் சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவன், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், வருண் சக்ரவர்த்தி, பிரித்வி ஷா, விஜய் சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் அனுபவ வீரர் ஷிகர் தவனுக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கை செல்லும் இந்திய அணிக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா ஏ, இந்தியா யு-19 அணிகளின் பயிற்சியாளராகவும், தற்போது நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வும் உள்ள ராகுல் டிராவிட் அப்பொறுப்புக்கு சரியான நபராக இருப்பார் என பிசிசிஐ எண்ணுவதாக கூறப்படுகிறது.
மேலும் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.