இத்தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் - ராகுல் டிராவிட்!

Updated: Tue, Jan 23 2024 15:42 IST
இத்தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் - ராகுல் டிராவிட்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக இத்தொடர் நடைபெறுவதால் இரு அணிகளின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்கான முழு டெஸ்ட் அணியையும் அறிவிக்காமல் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணியை மட்டுமே பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துரு ஜுரெலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேசமயம் அவருடன் ஸ்ரீகர் பரத், கேஎல் ஆகியோரும் விக்கெட் கீப்பர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யார் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார் எனவும், அதற்காகதான் கூடுதலாக இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கேஎல் ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அணி தேர்விலேயே இதுகுறித்து நாங்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளோம். அதற்காகதான் நாங்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களை தேர்ந்தெடுத்தோம். தென் ஆப்பிரிக்க தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக அற்புதமாக செயல்பட்டுள்ளார். மேலும் தொடரை சமன்செய்யவும் அவர் உறுதுணையாக இருந்தார். ஆனால் இது 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர். அதனால் தான் நாங்கள் இரண்டு முழுமையான விக்கெட் கீப்பரை அணியில் சேர்த்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

இதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஸ்ரீகர் பரத் அல்லது துருவ் ஜுரெல் ஆகியோரில் ஒருவர் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இதில் ஸ்ரீகர் பரத்திற்கான வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் சமீபத்தில் இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் அபாரமாக செயல்பட்ட அவர் சதமடித்து அசத்தியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இவர் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்தார். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரீகர் பரத் விளையாடுவார் என நம்பப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை