ENG vs SA, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட போட்டி; தொடர் பகிர்ந்தளிப்பு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றில் தென் ஆப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்று 1-1 என்ற் கணக்கில் சமனிலையில் இருந்தன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸில் இன்று நடைபெற்றது
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மாலன் 11 ரன்னிலும், வேண்டர் டூசென் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குயிண்டன் டி காக் அரைசதம் கடந்து அசத்தினார். இதற்கிடையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
ஆட்டம் தொடங்கிய பின்னும் அதிரடியாக விளையடைய குயிண்டன் டி காக் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். அவர் 92 ரன்களுடன் விளையாடிவந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் குயிண்டன் டி காக் 8 ரன்னில் தனது சதத்தையும் தவறவிட்டார்.
மேலும் இப்போட்டி முடிவின்றி அமைந்ததால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் பகிர்ந்துகொண்டனர்.