IND vs SA, 5th T20I: மழை கரணமாக ஐந்தாவது டி20 கைவிடல், சமனில் முடிந்த தென் ஆப்பிரிக்க தொடர்!

Updated: Sun, Jun 19 2022 22:51 IST
Rain Plays Spoilsport As 5th T20I Between India-South Africa Abandoned (Image Source: Google)

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. இந்த நிலையில், தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறுவதாக இருந்தது.

போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மகாராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மைதானத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மைதானப் பொறுப்பாளர்கள் ஆடுகளத்தை மழைநீர் படாமல் வழக்கம்போல “கவர்” செய்தனர். சில நிமிடங்கள் வெளுத்து வாங்கினாலும் மைதானமே குளமாகும் அளவுக்கு மழை பெய்தது.

சில நிமிடங்கள் வெளுத்து வாங்கினாலும் மைதானமே குளமாகும் அளவுக்கு மழை பெய்தது. பின்னர் மழை நின்றவுடன் அந்த தண்ணீரை விரைவாக வெளியேற்றும் பணிகளும் வேகமாக நடைபெற்றன. இதையடுத்து திட்டமிட்டதை விட 50 நிமிடங்கள் தாமதமாக 7.50 மணிக்கு ஆட்டம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 19 ஓவர்களுக்கு மட்டுமே ஆட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்திய அணியின் ஓப்பனர்களாக இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அட்டகாசமாக ஆட்டத்தை துவக்கிய இஷான், இங்கிடி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, ருதுராஜும் இங்கிடி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் களத்தில் இருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, 3.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. 

ஆட்டத்தை 5 ஓவர்களாக குறைத்து விளையாட நடுவர்கள் தரப்பு முடிவெடுத்தனர். ஆனால் முன்பைப் போலல்லாமல் மழை வெளுத்து வாங்கியதை அடுத்து ஆட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா ஆட்டத்தை வென்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் புவனேஷ்வர்குமார் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் தென் ஆப்ரிக்க கேப்டன் மஹாராஜ் இருவரும் கோப்பைக்கு ஒன்றாக போஸ் கொடுத்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை