ஐபிஎல் 2022: இந்த சீசனின் மிகச்சிறந்த செஞ்சுரி இதுதான் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது எவ்வித பிரஷரும் இல்லாமல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் அசத்தினார்கள்.
குறிப்பாக இளம் வீரர் ரஜத் பட்டிதாருடைய சிறப்பான ஆட்டம் காரணமாக விறுவிறுவென ரன்களை சேர்த்த பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை சேர்த்தது. இந்தப் போட்டியில் 54 பந்துகளை சந்தித்த அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 112 ரன்களை குவித்தார்.
இறுதிநேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் என 37 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் மட்டுமே குவித்ததன் காரணமாக பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இளம் வீரர் ரஜத் பட்டிதார் திகழ்ந்தார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஏனெனில் இதுபோன்ற பெரிய போட்டியில் இப்படிப்பட்ட சதம் அடித்த அவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது அனைவரது மத்தியிலும் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் கூறுகையில், “இது ஒரு ஸ்பெஷல் டே. எங்கள் அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். நான் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். நாங்கள் அனைவரும் இந்த போட்டியில் விளையாடிய விதம் மிக சிறப்பாக இருந்தது. நான் ஐபிஎல் தொடரில் பார்த்த மிகச் சிறந்த ஒரு செஞ்சுரி இது.
எங்களுடைய பந்து வீச்சாளர்களும் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் எதிரணிக்கு தங்களது சிறப்பான பங்களிப்பின் மூலம் அழுத்தத்தை கொடுத்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு அணியாக வெற்றிபெற முடிந்தது” என தெரிவித்தார்.