விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரியானா!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹரியான அணி ஹிமான்ஷு ராணாவின் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகசபடமாக . ஹிமான்ஷு ராணா 116 ரன்களும், யுவராஜ் சிங் 65 ரன்களும் அடித்தனர். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்த், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணியில் பாபா அபாரஜித், ஹரி நிஷாந்த் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய விஜய் சங்கரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசனும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய பாபா இந்திரஜித் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 31, சாய் கிஷோர் 29, ஷாருக் கான் 13 ரன்களிலும் ஆட்டமிழக்க, பாபா இந்திரஜிதும் 64 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் தமிழ்நாடு அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹரியான அணி தரப்பில் அன்ஷுல் காம்பொஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஹரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் லீக் சுற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி அரையிறுதியில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.